×

ஒற்றை யானை தாக்கி ஆதிவாசி பலி : வாழைகளை சேதப்படுத்தியது

கோவை: கோவை அருகே நேற்று மாலை யானை தாக்கி, மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த ஆதிவாசி ஒருவர் பலியானார். கோவை அருகே போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தானிக்கண்டி மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சன்(45). இவர் நேற்று காலை அங்கிருந்து வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் தானிக்கண்டி வனப்பகுதி வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வழி மறித்த ஒற்றை யானையிடம் சிக்கி கொண்டார். யானை அவரை தாக்கி கீழே தள்ளி, மிதித்து கொன்றது. அப்போது யானையின் பிளிறல் சப்தம் கேட்டு, மலைவாழ் மக்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, நஞ்சன் இறந்து கிடந்ததை கண்டனர். இது குறித்து போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் யானை தாக்கி நஞ்சன் இறந்ததை உறுதி செய்தனர். பின்னர் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கி இறந்த நஞ்சனுக்கு ஜெயா என்ற மனைவியும், செல்லம்மாள், ரோகினி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கோவை ஆலாந்துறை அருகே காளிமங்கலம் மணியகாரர் குட்டை தோட்டத்தை சேர்ந்தவர் சாமிபையன் என்ற செல்லப்பன்(56). முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர். இவரது தோட்டத்தில் 7 ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றையானை வாழைகளை தின்றும்,மிதித்தும் நாசம் செய்தது. நேற்று காலையில் ேதாட்டத்திற்கு சென்று பார்த்த செல்லப்பன் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதே யானை கடந்த வாரம் விராலியூரை சேர்ந்த டிரைவர் ரமேஷ்(36) என்பவரை அடித்து கொன்றது. காளிமங்கலத்தை சேர்ந்த சோமசுந்தரம்(35) என்பவரை தாக்கியதில், கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆலாந்துறை பகுதியில் தொடர்ந்து ஒற்றையானையின் அட்டகாசம் நீடிப்பதால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: இரவில் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானை வனத்திற்குள் செல்லாமல் பகலில் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான 120 ஏக்கர் விளைநிலத்தில் ஓய்வெடுக்கிறது. அங்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டும்,  கரும்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வைத்தும் யானையை அங்குள்ளவர்கள் போட்டோ எடுப்பதால், யானை வனத்திற்குள் செல்லாமல்  இரவில் அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்கிறது. வனத்துறையினர் தனியார் நிலத்தில் புகுந்து ஓய்வெடுப்பதை தடுத்து வனத்துறையினர் யானையை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Adivasis , Elephant, Banana, damage
× RELATED ஆதிவாசிகளின் வளர்ச்சியில் பாஜவுக்கு...